தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் ஊடாக யாழ். மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள கடைகள் அகற்றப்படும்

3 hours ago

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கடைகளால் அங்கு இடம்பெறும் சட்டவிரோத செயல்கள் தொடர்பில் வடமாகாண ஆளுநருக்கு வர்த்தக சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். 

அதற்கு தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் ஊடாக யாழ். மத்திய பேருந்து நிலையம் அபிவிருத்தி செய்யப்படும் போது அங்குள்ள கடைகள் அகற்றப்படும் என ஆளுநர் தெரிவித்துள்ளார்

  வர்த்தக சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  

அதன் போதே குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. 

மேலும், யாழ்ப்பாண நகரில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒருவழிப் பாதையூடாக வர்த்தகர்கள் பாதிக்கப்படுவதாக வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். 

அதற்கு வர்த்தகர்களைத் தவிர ஏனையோர் அவ்வாறு ஒருவழிப் பாதையாக்கியதன் ஊடாக போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளதை ஆளுநர் குறிப்பிட்டார்.

 நகரின் மத்தியிலுள்ள பேருந்து நிலையத்தாலேயே அந்த நெரிசல் ஏற்பட்டது என்பதையும், தனியாரும், இலங்கை போக்குவரத்துச் சபையினரும் நெடுந்தூர பேருந்துகளை புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்குவதன் ஊடாக இதனைச் சீர் செய்ய முடியும் என்பதையும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். 

அத்துடன் பேருந்து நிலையத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கடைகளால் அங்கு இடம்பெறும் சட்டவிரோத செயல்கள் தொடர்பாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். 

தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் ஊடாக யாழ். மத்திய பேருந்து நிலையம் அபிவிருத்தி செய்யப்படும் போது அங்குள்ள கடைகள் அகற்றப்படும் என ஏற்கனவே இலங்கை போக்குவரத்துச்சபையின் பிரதான பிராந்திய முகாமையாளர் மாவட்டச் செயலக கூட்டத்தில் தெரிவித்ததை நினைவுகூர்ந்த ஆளுநர், நெடுந்தூர பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்ட பின்னர் வீதியின் நெருக்கடி நிலைமையை அவதானித்து நிலைமையை ஆராயலாம் எனக் குறிப்பிட்டார்.