வடகிழக்கு ஆஃப்ரிக்க பகுதியில் சூடானில் பஞ்சம் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது. அந்நாட்டில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரால் சூடான் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த எல்- ஃபாஷர் நகரை துணை இராணுவப் படையான ஆர்எஸ்எஃப் கைப்பற்றி உள்ளது.

இந்த உள்நாட்டு போரால் அங்குள்ள மக்களுக்கு உணவு, மருந்து மற்றும் நிவாரண உதவிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சூடான் முழுவதும் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதாகவும், சுமார் 3,75,000 பேர் உணவின்றி பட்டினியால் தவிப்பதாகவும் ஐ.நா.வின் ஐபிசி உணவு பாதுகாப்பு அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

குறிப்பாக எல்- ஃபாஷர், வடக்கு டார்ஃபர், கடுக்லி, தெற்கு கோர்டோஃபான் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் சிக்கியுள்ள மக்கள் பசியால் இலைகள், கால்நடைத் தீவனம் மற்றும் புல் ஆகியவற்றை உண்டு வாழும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.