கார்த்திகை மாதம்.மாவீரர் நாளைப் போன தடவை அரசாங்கம் ஒப்பீட்டளவில் அனுமதித்தது. ஆங்காங்கே போலீசார் சில தடைகளை ஏற்படுத்தினாலும் மாவீரர் நாள் அமைதியாக அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த முறை தாயகத்திலும் புலம்பெயர்ந்த பரப்பிலும் ஒப்பீட்டளவில் அதிக தொகை மக்கள் கூடிய நிகழ்வுகளாக இரண்டைக் குறிப்பிடலாம். ஒன்று தாயகத்தில், கிளிநொச்சியில். மற்றது,கனடாவில்.தாயகத்துக்கு வெளியே அதிகதொகை மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடாக கனடா காணப்படுகிறது. எனவே அங்கே ஒப்பீட்டளவில் மிகப்பெரிய அளவில் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
கடந்த வாரம் அமைச்சர் சந்திரசேகரன் பேசும்போது அரச படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்படும் என்று தெரிவித்தார். மாவீரர் மாதத்தையொட்டி அவர் அவ்வாறு சொன்னாரா? அல்லது விசுவாசமாகவே அரசாங்கம் அப்படி ஒரு நிலைப்பாட்டோடு இருக்கிறதா? ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கப் போவதாக அரசாங்கம் கூறியது. ஆனால் இன்றுவரையிலும் அவ்வாறு நடக்கவில்லை. இப்பொழுது பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக வேறு ஒரு சட்டத்தைக் கொண்டு வரப் போவதாகக் கூறப்படுகிறது. கடந்த ஜெனிவா கூட்டத்தொடரை முன்னிட்டு கூட்டத் தொடர் தொடங்க முன்பு அரசாங்கம் அவ்வாறு அறிவித்தது.அப்படித்தான் இப்பொழுது மாவீரர் நாளையொட்டி உணர்ச்சிகரமான அரசியற் சூழலில் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள துயிலுமில்லங்களை விடுவிக்கப் போவதாக சந்திரசேகர் கூறுகிறாரா?
தேசிய மக்கள் சக்தியின் இதயமாகக் காணப்படும் ஜேவிபி இரண்டு தடவைகள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஓர் அமைப்பு.இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்ட, இரண்டு தடவைகள் நசுக்கப்பட்ட ஓர் அமைப்பு. பிரேமதாசவின் காலத்தில் இரண்டாவது தடவை அவர்கள் நசுக்கப்பட்டபோது இறந்த தமது தியாகிகளை நினைவு கூர்வதற்கு அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனினும் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் குறிப்பாக திருமதி சந்திரிகாவின் காலகட்டத்தில் அவர்கள் நினைவு கூர்வதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். இடைப்பட்ட காலகட்டத்தில் ஜேவிபி தன் தோழர்களை ரகசியமாக நினைவு கூர்ந்தது. அந்நாட்களில் அந்த நிகழ்வுக்கு ஒரு அர்த்தம் இருந்தது; ஆழம் இருந்தது;புனிதம் இருந்தது என்றும் ஆனால் பின்னர் சந்திரிக்கா தடைகளை நீக்கியபின் அது ஒரு சடங்கு போல் ஆகிவிட்டது என்றும் ஒரு மூத்த ஜேவிபி உறுப்பினர் பல ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு சொன்னார்.தடைகள் இருக்கும் வரையிலும்;ரகசியமாக நினைவு கூரப்படும் வரையிலும் அந்த நாளுக்கு ஒரு ஆன்மா இருந்தது.ஆனால் தடைகள் நீக்கப்பட்டபின் அது ஒரு பெருமெடுப்பிலான சடங்காக மாறி முடிவில் அதன் ஆன்மாவை இழந்து விட்டது என்றும் அவர் சொன்னார்.
இப்பொழுது ஜேவிபி ஆளுங்கட்சி ஆகிவிட்டது.நினைவு நாட்களுக்குள்ள உணர்வுபூர்வமான முக்கியத்துவத்தை அவர்களுக்கு யாரும் விளங்கப்படுத்தத் தேவையில்லை.இப்பொழுது இருக்கும் அரசுத் தலைவர் தன் சொந்தச் சகோதரனைப் பறிகொடுத்தவர்.தன் உறவினர்களையும் பறிகொடுத்தவர். எனவே அவர்களுக்கு நினைவு நாட்களின் முக்கியத்துவம்,புனிதம் விளங்கும். இந்த அடிப்படையில் பார்த்தால் துயிலும் இல்லங்களை விடுவிக்க வேண்டிய பொறுப்பு இந்த அரசாங்கத்துக்குத்தான் அதிகம். பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஆனால் படைத்தரப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் துயிலும் இல்லங்களை விடுவிப்பது என்பதை முக்கியமாக இரண்டு அம்சங்கள் தீர்மானிக்கின்றன. ஒன்று,எதிர்க்கட்சிகள் அதனை இனவாதமாக மாற்றக்கூடாது. இரண்டாவது,படைத்தரப்பு அதற்குச் சம்மதிக்குமா என்பது.
எதிர்க்கட்சிகள் பலமான ஒரு கூட்டை உருவாக்கும் முயற்சிகளில் தீவிரமாக முயற்சிக்கும் ஒரு பின்னணியில்,அரசாங்கம் ஏறக்குறைய அதே காலப்பகுதியில் மாவீரர் துயிலும் இல்லங்களை விடுவிக்கும் முடிவை உத்தியோகபூர்வமாக எடுக்குமா என்பது சந்தேகம்தான்.
தென்னிலங்கையில் எதிர்க்கட்சிகள் ஒன்று திரளத் தொடங்கிவிட்டன. போதைப் பொருளுக்கு எதிராகவும் பாதாள உலகக் கும்பல்களுக்கு எதிராகவும் அரசாங்கம் விட்டுக்கொடுப்பற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.இதன் விளைவாக எதிர்க்கட்சிகள் தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
போதைப் பொருள் கும்பல்களுக்கு எதிராகவும் பாதாள உலகக் குற்றவாளிகளுக்கு எதிராகவும் அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள்,ஒருபுறம் அரசாங்கத்திற்கு சிங்கள மக்கள் மத்தியில் அபிமானத்தைக் கூட்டியிருக்கின்றன.இன்னொருபுறம்,எதிர்க்கட்சிகளை தற்காப்பு நிலைக்குத் தள்ளியிருக்கின்றன.ஏனென்றால் இந்தக் குற்றக் கும்பல்களோடு எங்கேயோ ஓரிடத்தில் அரசியல்வாதிகளுக்குத் தொடர்பு இருக்கிறது என்பது இப்பொழுது நிரூபிக்கப்பட்டு வருகிறது.அந்த அரசியல்வாதிகள் பெருமளவுக்கு எதிர்க்கட்சிகளைச் செய்தவர்களாகத்தான் காணப்படுகிறார்கள்.அல்லது முன்னைய அரசாங்கங்களின் காலத்தில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது இப்பொழுது தெரிய வருகிறது.
அதேசமயம், அண்மையில் போதைப் பொருளை வைத்திருந்ததற்காகக் குற்றம் சாட்டப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த தேசிய மக்கள் சக்தியின் உள்ளுராட்சி சபை உறுப்பினர் தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இதில் ஒரு சிறந்த முன்னுதாரணம் உண்டு.நாட்டை இதற்கு முன்பு ஆட்சி செய்த ஏனைய கட்சிகளிடம் அவ்வாறான சிறந்த முன்னுதாரணங்கள் இல்லை என்று மக்களை நம்பச் செய்யும் விதத்தில் தேசிய மக்கள் சக்தியின் போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளும் பாதாள உலகம் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் திட்டமிட்டுக் கட்டமைக்கப்படுகின்றன.இதனால் எதிர்க்கட்சிகள் பெருமளவுக்கு தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன.
அதேசமயம் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக ஒன்றிணைய வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.அவ்வாறு ஒன்றிணைந்து எதிர்க்கட்சிகள் விரைவில் அரசாங்கத்திற்கு எதிராகக் கூட்டு நடவடிக்கைகளில் இறங்கலாம் என்று தெரிகிறது. ஆனால் அரசாங்கம் அதைக் குறித்து அலட்டிக் கொள்ளவில்லை.அதுமட்டுமல்ல,குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை குழப்புவதற்காகவே எதிரணிகள் ஒன்று திரள்கின்றன என்று சிங்கள மக்களை நம்ப வைக்கும் நோக்கத்தோடு அரசாங்கம் சிந்திக்கின்றது;செயல்படுகின்றது.
இவ்வாறு தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள எதிர்க்கட்சிகள் தங்களைப் பலப்படுத்திக் கொள்வதற்காக அரசாங்கத்துக்கு எதிராக கையில் எடுக்கக் கூடிய ஒரே ரெடிமேட் ஆயுதம் இனவாதம்தான்.
ஐநா கூட்டத்தொடரில் அதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.அரசாங்கம் படைத்தரப்பை பாதுகாக்கும் முடிவுகளை எடுத்ததோடு பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவும் இல்லை. பன்னாட்டு விசாரணைப் பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவும் இல்லை.
இப்பொழுது மாவீரர் மாதத்தை முன்னிட்டு படைத் தரப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் துயிலுமில்லங்களை விடுவிக்கப்போவதாக சந்திரசேகரன் கூறியிருப்பதை எதிர்க்கட்சிகள் கையில் எடுக்க முடியும். ஐநா கூட்டத் தொடரின் பின்னணியில் இனவாதிகளுக்கு வாய்ப்பளிக்காத விதத்தில் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிரான முடிவுகளை எடுத்ததுபோல, துயிலும் இல்லங்களின் விடயத்திலும் எதிர்க் கட்சிகளுக்கு வாய்ப்புக்களை வழங்காத முடிவுகளையே எடுக்குமா?
மேலும் இந்த விடயத்தில் துயிலுமில்லங்களில் காணப்படும் படைத்தளங்களை அகற்றுவது உடனடிக்குச் சாத்தியமானது அல்ல.முதலாவதாக படைத்தரப்பு அதற்கு ஒத்துழைக்க வேண்டும். இரண்டாவதாக சில துயிலும் இல்லங்களில் காணப்படும் படைத்தளங்கள் அப்பகுதியைச் சேர்ந்த படைத்தரப்பின் தலைமை மையங்களாகக் காணப்படுகின்றன.உதாரணம், கோப்பாய் துயிலும் இல்லம். அங்கிருந்து படைத்தரப்பை அகற்றுவது என்றால் குறுகிய காலத்துக்குள் அதைச் செய்யமுடியாது.கோப்பாயில் உள்ள போலீஸ் நிலையத்தை இடம் மாற்றுவதற்கே எவ்வளவு காலம் எடுத்தது?
சில நாட்களுக்கு முன் வெளியான அடுத்த நிதி ஆண்டுக்கான நிதி அறிக்கையில், பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கும் சிங்கள பௌத்த அரச பாரம்பரியத்தை மீறாத என்பிபி அரசாங்கம், படையினர் சம்பந்தப்பட்ட விடயங்களில் எப்படிபட்ட முடிவை எடுக்கும்?
எனவே துயிலுமில்லங்களில் முகாம்களை அமைத்திருக்கும் படையினரை அங்கிருந்து அகற்றும் முடிவை உடனடியாக அமல்படுத்த அரசாங்கத்தால் முடியுமா? ஜெனிவா கூட்டத் தொடரை முன்னிட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கப் போவதாக அரசாங்கம் அறிவித்ததைப் போன்றதா இதுவும்?











