மாகாண சபைத் தேர்தலுக்கு பத்து பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ள ஜனாதிபதி அநுர குமர, எல்லை நிர்ணயம் முடிந்த பின்னரே தேர்தல் என்பதால் அது எப்போது என்று சொல்ல முடியாதென நேர்மையாகக் கூறியுள்ளார். ஷவடக்குக்கு அடுத்த புகையிரதம் விரைவில் யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்படும்| என்று நீதிபதி இளஞ்செழியனுக்கு இங்கிலாந்தில் இடம்பெற்ற பாராட்டு நிகழ்வில் தெரிவிக்கப்பட்டதன் மறைபொருள் என்ன?
ஜனாதிபதி தோழர் அநுர குமர திஸ்ஸநாயக்க தமது அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவு திட்டத்தை சில நாட்களுக்கு முன்னர் சமர்ப்பித்தார். தோழரின் அரசாங்கத்தை எதிர்க்கட்சிகள் தத்தம் விருப்புக்கு ஏற்றவாறு தனித்தும் கூட்டாகவும் பிச்சுப் பிடுங்கும் வாய்ப்புக் காலம் இது.
ஜனநாயக தமிழ் தேசிய மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக மீண்டும் இணைந்து இயங்க விரும்பினால் தமிழரசு கட்சியின் நிலைப்பாட்டுக்கு இணங்க வேண்டுமென்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
'அடுத்த புகையிரதம் விரைவில் யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்படும்" என்ற கோட்டை புகையிரத நிலையத்தின் அறிவிப்பு, லண்டனில் இடம்பெற்ற முன்னாள் மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் பாராட்டு விழா நிகழ்வில் தெரிவிக்கப்பட்டதன் மறைபொருள் அர்த்தப்படுத்தப்பட்டு பலராலும் பேசப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு வாரத்தில் வெளியான முக்கிய செய்திகளான இந்த மூன்றும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்டவையாதலால் அவற்றை உள்ளீடு செய்து அலசுவது இந்த வாரத்துக்குப் பொருத்தமாக தெரிகிறது.
ஜே.வி.பி.யின் தேசிய மக்கள் சக்தி அரசின் வரவு செலவுத் திட்டத்தை அதன் நிதியமைச்சர் என்ற நிலையில் அநுர குமர கடந்த வாரம் சமர்ப்பித்தார். இந்த மாதம் 21ம் திகதி நுகேகொடையில் சில எதிர்க்கட்சிகள் இணைந்து அரசுக்கு எதிராக நடத்தும் கூட்டத்தில் இந்த வரவு செலவுத் திட்டம் பேசுபொருளாக இருக்குமென எதிர்பார்க்கலாம்.
முன்னைய ஆட்சிக் காலங்களில் இடம்பெற்ற பொருளாதார நெருக்கடி இனி வராது என்ற உச்சத்தில் அச்சம் வேண்டாமென்று அநுர குமர உறுதியளித்துள்ளார். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, போக்கவரத்துச் செலவு ஏற்றம், மின்கட்டண உயர்வு என்பவை ஏற்கனவே விசவாயுவாக ஏறியிருக்கையில், சர்வதேச நாணயத்துடனான இணக்கம் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த ஆதரவு தொடர்ந்து கிடைக்கும் என்ற நம்பிக்கை தேசிய மக்கள் சக்திக்கு இருப்பதால் ஷஅச்சம் தவிர்ஷ வெளிவந்திருக்கிறது.
ஆனால், இனப்பிரச்சனைக்கு தீர்வு காணாத நிலையில் பொருளாதார முன்னேற்றம் அடைய முடியாது என்று தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் சிவஞானம் சிறீதரன் தமதுரையில் எச்சரிக்கை செய்துள்ளார். பொருளாதார நெருக்கடிக்கும் பொருளாதார முன்னேற்றத்துக்கும் இடையிலான அர்த்தம் இங்கு பிசுபிசுத்து காணப்படுகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வரவு செலவுத் திட்டத்தை மக்களுக்கு சலுகை வழங்காத ஒன்றாக விமர்சித்துள்ளார். வறுமையும் வேலையின்மையும் அதிகரிப்பதால் மக்களுக்கு சலுகைகள் வேண்டுமென்பது இவரது பார்வை. மக்களுக்கு வேலை வாய்ப்பு, உள்நாட்டு உற்பத்தி ஆகியவைகளை வலியுறுத்த வேண்டிய எதிர்க்கட்சித் தலைவர், சலுகைகள் ஊடாக மக்களை வறுமைக்கோட்டின்கீழ் இருத்தி சலுகைகள் ஊடாக அவர்களை வாழவைக்க விரும்புவது அவரின் அடித்தட்ட அரசியல் பார்வையை பளிச்சிட்டுக் காட்டுகிறது.
கடந்த வாரம் இந்தியா சென்றிருந்த இவர் அங்கு பிரதமர் மோடி உட்பட பல்வேறு தரப்பின் முக்கியஸ்தர்களையும் சந்தித்து உரையாடினார். இலங்கைக்கான பல தேவைகளை இங்கு பட்டியலிட்ட இவர், 13ம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் இந்தியாவிடம் கோரியிருந்தார்.
1987ல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் ஜே.ஆரும் ராஜிவும் ஒப்பமிட்டவேளை அதனை எதிர்த்து நின்ற முதலாமவர் சஜித்தின் தந்தையான அன்றைய பிரதமர் ரணசிங்க பிரேமதாச. அப்போது ராஜிவ் காந்தியை ராஜரீக முறையில் சந்திப்பதைக்கூட இவர் நிராகரித்திருந்தார். 1990 மார்ச் மாதம் இந்திய இராணுவத்தை வெளியேற்றியதோடு அன்றைய வடக்கு-கிழக்கு இணைந்த மாகாண சபையை கலைத்தவரும் இவரே. அதேசமயம் இரு நாட்டு ஒப்பந்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் வன்செயலில் ஈடுபட்டவர்கள் இன்று ஆட்சி புரியும் ஜே.வி.பி.யினர்.
இப்போது, அநுர குமர அரசிடம் அதே ஒப்பந்தத்தில் பிரசவமான 13ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு ரணசிங்க பிரேமதாசவின் மகன் சஜித் நேரில் இந்தியாவிடம் கேட்கும் காட்சியும், அதனை இழுத்தடிக்கும் ஜே.வி.பி.யின் போக்கும், அரசியலில் எது ஆதாயமோ அதன் பக்கமே காற்று வீசுமென்பதை காட்டுகிறது.
இதே போன்றதொரு காற்று வீச்சுடன் மாற்றுத் தமிழ் தேசிய கட்சிகளை நிபந்தனையுடன் தங்களுடன் இணைய வருமாறு தமிழரசு கட்சி அழைப்பு விடுத்துள்ளது. விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஓர் உள்;ராட்சித் தேர்தலை மையப்படுத்திப் பிளந்த சாதனை தமிழரசுக்கானது. இதனால் கூட்டமைப்பிலிருந்த மூன்று முன்னாள் ஆயுதக் குழுக்கள் தம்மை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என மாற்றிக் கொண்டன.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலும் உள்;ராட்சி மன்றத் தேர்தலும் இரண்டு அணிகளுக்கும் எதிர்பாராத பாடத்தைக் கற்றுக்கொடுத்தது. இதனால் கிடைத்த இடைவெளியை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட ஜே.வி.பி.யின் தேசிய மக்கள் சக்தி வடக்கு கிழக்கில் எட்டு எம்.பிக்களைப் பெற்றதுடன் தமிழர் பிரதேசங்களில் எதிர்பார்க்காத எண்ணிக்கையில் உள்;ராட்சி மன்றத் தேர்தலிலும் வெற்றி கொண்டது. தமிழ்த் தேசிய கட்சிகளின் பலவீனம் தமிழர் தாயகத்தில் தேசிய மக்கள் சக்தியை பலமாக்கியது. வரப்போகிறதென எதிர்பார்க்கப்படும் மாகாண சபைத் தேர்தலை இலக்கு வைத்து இவர்கள் மீண்டும் இணைய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
கடந்த புதன்கிழமை கூடிய தமிழரசு கட்சி நிர்வாகம், பகிரங்கமாக பொது அழைப்பொன்றை விடுத்துள்ளது. தங்கள் கட்சியின் நிலைப்பாட்டுக்கு இணங்கினால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக மீண்டும் இயங்கலாமென ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு இந்த அழைப்பு. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இந்த அழைப்பு என்று செய்திகள் கூறுகின்றன.
இதற்கு பதிலளித்துள்ள ஜனநாயக கூட்டணியினர், தமிழரசு கட்சியின் நிபந்தனைகள் என்னவென்று தங்களுக்குத் தெரியாதென கைவிரித்துள்ளனர். பேசிய பின்னர் இணையலாமே தவிர, பேசுவதற்கு முன்னர் நிபந்தனைகளை வைக்கக்கூடாதென்றும் இவர்கள் சுட்டியுள்ளனர். இணைவதற்கு முன்னர் நிபந்தனைகளை விதிப்பதானது கொக்குக்கு தட்டில் பால் வார்த்த கதை போன்றது.
மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடைபெறுமென்ற எதிர்பார்ப்புடன் தமிழரசின் முன்னாள் எம்.பி. சுமந்திரன் கட்சி சார்பில் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடுவார் என்ற பரவலான செய்திகளின் பின்னணியில் பிரிந்தவர்கள் மீண்டும் கூடுவது அவசியமென்பது தெரிகிறது. ஆனால், மாகாண சபைத் தேர்தல் எப்போது என்பது - முன்னர் ஒரு தடவை குறிப்பிட்டதுபோல புரியாத புதிராக உள்ளது.
மாகாண சபைத் தேர்தலை கோருபவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தமது வரவு செலவுத் திட்டத்தில் பத்து பில்லியன் ரூபாவை அநுர குமர அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால், எல்லை நிர்ணயத்தின் பின்னரே தேர்தல் நடைபெறுமென்றும் அநுர குமர அறிவித்துள்ளார். இதுவும்கூட கொக்குக்கு தட்டில் பால் வார்த்த கதைதான். தேர்தல் நடக்கும், நடக்காது என்ற பட்டிமன்றத்தை தொடர்ச்சியாக்கியுள்ளது பத்து பில்லியன் ஒதுக்கீடு. இலங்கையிலுள்ள ஒன்பது மாகாணங்களில் வடக்கில் மட்டுமே இத்தேர்தல் விவகாரம் உசுப்பேறி நிற்கிறது. மாகாண சபை என்பது மக்களுக்கானதா அல்லது கதிரைகளுக்கானதா என்ற கேள்;வியும் இதனோடு எழுந்து வருகிறது.
வடமாகாண முதலமைச்சர் பதவி போட்டியில் அண்மையில் ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் பெயர் ஆங்காங்கே பேசப்படுகிறது. இவரது தந்தை தீவுப்பகுதியின் தமிழரசுத் தூண்களில் முக்கியமானவராக இருந்தவர். இவரது இளைய சகோதரர் தமிழரசின் மத்திய குழுவில் ஒருவர். இவரது தாய்மாமன் ஒருவர் தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் ஒருவரின் மகளின் கணவர்.
இதற்கும் மேலாக நீதி தவறாத நேர்மையான, துணிச்சலான ஒரு நீதிபதி என்ற புகழ் பெயருடன் இன்றும் துலங்குபவர் திரு. இளஞ்செழியன். செம்மணி கிரு~hந்தி கொலை வழக்கிலிருந்து பல நீதித் தீர்ப்புகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அரசியலில் இவருக்கு நாட்டம் இல்லாதிருக்கலாம். ஆனால், இவர் அரசியலுக்கு பொருத்தமற்றவர் என்று கூற முடியாது. வடமாகாண முதலமைச்சராகவிருந்த நீதியரசர் விக்னேஸ்வரன் தன்முனைப்புடன் இயங்கியவர் என்பதற்காக, நீதிபதி இளஞ்செழியனை அவருடன் ஒப்பீடு செய்வது முற்றிலும் தவறானது.
இங்கிலாந்தில் அண்மையில் இடம்பெற்ற நீதிபதி இளஞ்செழியன் பாராட்டு வைபவத்தில், 'அடுத்த புகையிரதம் விரைவில் யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்படும்" என்ற பிரபலமான கோட்டை புகையிரத நிலைய அறிவிப்பு, ஓரிரு தடவைகள் பிரஸ்தாபிக்கப்பட்டது. தமது பதிலுரையில் நீதிபதி இளஞ்செழியன் இதனைத் தொட்டுப் பேசியபோது திரண்டிருந்தவர்களின் கையொலி பலமாக எழுந்தது.
வடமாகாண சபையின் முதலமைச்சர் பதவிக்கு புதியவர் ஒருவர் களமிறக்கப்படப் போகிறார் என்பதே புகையிரத சொற்றொடரின் மறைபொருள் என்று இந்நிகழ்வில் பங்குபற்றியவர்களின் விமர்சனங்க;டாக அறிய முடிந்தது.
நல்லவர், வல்லவர், துணிச்சலானவர், நீதிக்கு மட்டுமே தலைவணங்குபவர், நீதித்துறையை நீதியால் அலங்கரித்தவர், சிங்கள ஆட்சித் தரப்பால் வஞ்சிக்கப்பட்டவர் என்ற அறிமுகத்துடன் முதலமைச்சராக ஒருவர் வரவேண்டுமென்பது காலத்தின் நியதியானால் அதனை யாரால் தடுக்க முடியும்?












