எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் முதலமைச்சர் வேட்பாளர்களுக்குப் பொது வேட்பாளர்களை நிறுத்துவது குறித்து பல எதிர்தரப்பு அரசியல் கட்சிகள் கவனம் செலுத்தியுள்ளன.

இது தொடர்பாக விவாதிக்க, பல எதிர்க்கட்சிகளின் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் இல்லத்தில் ஒன்று கூடினர். சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இந்த சந்திப்பு நீடித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தக் கோருவது குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. மாகாண சபைத் தேர்தலை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்றும், முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளர்களுக்குப் பொது வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்றும் இங்கு முன்மொழியப்பட்டது.

பொது வேட்பாளர்களை நிறுத்துவது சாத்தியமில்லை என்றால், தனித்தனியாகப் போட்டியிட்டு, பின்னர் ஒன்றாக இணைந்து மாகாண சபையை அமைப்பது குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
முதலமைச்சர் பதவிக்குக் பொது எதிர்க்கட்சி வேட்பாளர்களை நிறுத்துவது குறித்து, எதிர்க்கட்சிகளில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

மாகாண சபைத் தேர்தலை விரைவாகப் பெறுவதற்கான ஒரு செயல்திட்டத்தின் அடிப்படையில் செயற்படுவது குறித்தும், தேர்தலை விரைவுபடுத்த அரசாங்கத்தை வலியுறுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தயாசிறி ஜயசேகர, மனோ கணேசன், சம்பிக்க ரணவக்க, லசந்த அழகியவன்ன, அநுர பிரியதர்ஷன யாப்பா, மஹிந்த அமரவீர உட்படப் பல எதிர்க்கட்சிச் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.

இதேவேளை வடக்கு மற்றும் கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளுடனும் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.