கைது செய்யப்பட்ட 30 இந்திய மீனவர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!

4 hours ago

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 30 இந்திய மீனவர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் குறித்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை, குறித்த மீனவர்களின் வழக்கு விசாரணை நேற்றைய தினம் (6) மன்னார் நீதிமன்றத்தில் இடம்பெற்ற நிலையில் முதலாம் மற்றும் இரண்டாம் குற்றச்சாட்டுக்களுக்கு பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட தலா 12 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மூன்றாவது குற்றச்சாட்டுக்கு 26 மீனவர்களுக்கு தலா 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இதேவேளை, ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மன்றில் ஆஜர்படுத்தப்பட்டு நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்ட 4 இந்திய மீனவர்களுக்கு மூன்றாவது குற்றச்சாட்டிற்காக தலா 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

பின்னர் அனைவருக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டதுடன் மேலும் மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நான்கு படகுகளின் உரிமையாளர்களையும் எதிர்வரும் மார்ச் மாதம் 19 ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மன்று உத்தரவிட்டது.