கல்மேகி புயல்: 52 பேர் பலி!

4 hours ago

மத்திய பிலிப்பைன்ஸைத் தாக்கிய மிக சக்திவாய்ந்த கல்மேகி புயல் தாக்கியதில் குறைந்தது 52 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இலட்சக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கல்மேகி புயல் பெரும் பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது. இதில் அதிக மக்கள் தொகை கொண்ட மத்திய தீவான செபுவின் முழு நகரங்களும் அடங்கும். அங்குதான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. மேலும் 13 பேர் காணாமல் போயுள்ளனர்.

மக்கள் கூரைகளில் தஞ்சம் அடைவதை காணொளிகள் காட்டுகின்றன. அதே நேரத்தில் வாகனங்கள் மற்றும் கப்பல் கொள்கலன்கள் தெருக்களில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

செபுவின் தெற்கே உள்ள மின்டானாவ் தீவில் நிவாரணப் பணிகளுக்கு உதவுவதற்காக அனுப்பப்பட்ட இராணுவ உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில், அதன் ஆறு பணியாளர்கள் இருந்துள்ளனர் எனினும் அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கை வெளியிடப்படவில்லை.

பின்னர் விமானி மற்றும் பணியாளர்களின் உடல்கள் என நம்பப்படும் ஆறு உடல்கள் மீட்கப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். உள்ளூர்வாசிகளால் டினோ என்று அழைக்கப்படும் இந்தப் புயல், செவ்வாய்க்கிழமை அதிகாலை கரையைக் கடந்ததிலிருந்து பலவீனமடைந்துள்ளது. ஆனால் தொடர்ந்து மணிக்கு 80 மைல் (மணிக்கு 130 கிமீ) வேகத்தில் காற்று வீசி வருகிறது.

இது புதன்கிழமைக்குள் விசயாஸ் தீவுகள் பகுதியைக் கடந்து தென் சீனக் கடல் வழியாக நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

செபுவில் நிலைமை உண்மையில் முன்னோடியில்லாதது என்று மாகாண ஆளுநர் பமீலா பாரிகுவாட்ரோ ஒரு பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

பெரும்பாலான இறப்புகள் நீரில் மூழ்கியதால் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புயல் காரணமாக மலைப்பகுதிகளிலும், நகரங்களிலும் சேற்று நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

செபுவில் குடியிருப்புப் பகுதிகளுக்கு ஏற்பட்ட சேதம் மிகப் பெரியது. பல சிறிய கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகளுக்குள் சிக்கிய மக்களை மீட்க மீட்புக் குழுக்கள் படகுகளில் சென்றன.

மொத்தத்தில், கிட்டத்தட்ட 400,000 பேர் சூறாவளியின் பாதையில் இருந்து இடம்பெயர்ந்ததாக சிவில் பாதுகாப்பு அலுவலகத்தின் துணை நிர்வாகி ரஃபேலிட்டோ அலெஜான்ட்ரோ ஒரு செய்தி மாநாட்டில் தெரிவித்தார்.