இலங்கையில் சமூக ஒருமைப்பாட்டையும் சமாதானத்தையும் வலுப்படுத்தல் (SCOPE) செயற்திட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியானது, “ஒற்றுமையின் எதிரொலிகள்” என்ற தலைப்பில் ஒக்டோபர் 30 ஆம் திகதியன்று கோல்ஃபேஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
இது இலங்கையில் சமூக ஒற்றுமையை மேம்படுத்தும்பொருட்டு மூன்றரை ஆண்டுகாலமாக மேற்கொள்ளப்பட்ட பணிகளின் இறுதிக்கட்டமாகும்.
மார்ச் 2022 முதல், SCOPE 50க்கும் மேற்பட்ட அரசு மற்றும் சிவில் சமூக பங்காளர்களுடன் இணைந்து சமூகம் மற்றும் நிறுவனம்சார் திறன்களை மேம்படுத்தவும், மேலும் அனைவரையும் உள்ளடக்கிய உரையாடல்களை ஊக்குவிக்கவும், பொருளாதார மேம்பாட்டுக்காகவும் பணியாற்றியுள்ளது.
இது சார்ந்த செயற்பாடுகளை SCOPE இலங்கையின் 25 மாவட்டங்களிலும் 175,000க்கும் மேற்பட்ட மக்களுடன் இணைந்து முன்னெடுத்தது. SCOPE செயற்திட்டமானது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜெர்மன் கூட்டாட்சி வெளியுறவு அலுவலகத்தால் இணைந்து நிதியளிக்கப்பட்டு நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சுடன் இணைந்து GIZ ஆல் செயற்படுத்தப்படுகிறது.
இந்நிறைவு விழாவானது அரசாங்கம், சர்வதேச சமூகம், சிவில் சமூகம், கல்வித்துறை, ஊடகங்கள் மற்றும் தனியார் துறையின் பிரதிநிதிகளை ஒன்றிணைத்தது. அந்தவகையில் செயற்திட்ட நிகழ்ச்சியின் சாதனைகளைக் கொண்டாடவும், கற்றுக்கொண்ட பாடங்களைப் பற்றிச் சிந்திக்கவும், எதிர்வரும் ஆண்டுகளில் சமூக ஒற்றுமையை எவ்வாறு நிலைநிறுத்துவது என்பது குறித்து விவாதிக்கவும் பங்கேற்பாளர்கள் கூடியிருந்தனர்.
முன்னாள் தேசிய ஒருங்கிணைப்புத் துணை அமைச்சரும், தற்போதைய சமய மற்றும் கலாசார விவகாரங்களுக்கான துணை அமைச்சருமான கௌரவ முனீர் முலாஃபர், இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கௌரவ கார்மென் மொரேனோ, மற்றும் இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான ஜெர்மன் தூதுவர் கௌரவ டாக்டர் (கலாநிதி/முனைவர்) ஃபெலிக்ஸ் நியூமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சி ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை சுட்டிக்காட்டிய கௌரவ கார்மென் மொரேனோ அவர்கள் குறிப்பிடுகையில், “கடந்த மூன்றரை ஆண்டுகளில், நிறுவனங்கள், சமூகங்கள் மற்றும் தனிநபர்களுக்கு இடையே பாலங்களை உருவாக்குவதற்கு SCOPE உதவியுள்ளது. சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் இம்முயற்சியை ஆதரிப்பதில் ஐரோப்பிய ஒன்றியம் பெருமை கொள்கிறது. இலங்கை இப்பயணத்தைத் தொடர்கையில், SCOPE மூலம் நிறுவப்பட்ட பாடங்களும் கூட்டாண்மைகளும் அதற்கான நீடித்த பங்களிப்பினை பிரதிபலிக்கும்”, எனத் தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜெர்மனியின் பகிரப்பட்ட உறுதிமொழியை வலியுறுத்தி, கௌரவ H.E. ஃபெலிக்ஸ் நியூமன் குறிப்பிடுகையில், “திறந்த உரையாடல், நல்லிணக்கம் மற்றும் கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொண்டவற்றுக்கு ஜெர்மனி மிகுந்த முக்கியத்துவம் வழங்குகிறது. இதை அடித்தளமாகக்கொண்டு நேர்மையான பிரதிபலிப்பு மற்றும் ஒத்துழைப்பு நீடித்த சமூக ஒற்றுமைக்கான அடித்தளங்களை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதை SCOPE செயற்திட்டம் எடுத்துக்காட்டியது.
அந்தவகையில் நிறுவனங்களை வலுப்படுத்தி, சமூகங்கள் ஒன்றாக முன்னேற அதிகாரம் அளிக்கும் இவ்வாறான ஒரு திட்டத்தை ஆதரித்ததையிட்டு நாம் பெருமையடைகிறோம்” எனக் குறிப்பிட்டார்.
பிரமுகர்களின் உரைகளுக்கு மேலதிகமாக, இந்நிகழ்வில் SCOPE இன் தாக்கம் மற்றும் பிரதிபலன்கள் குறித்த விளக்கக்காட்சி, பகிரப்பட்ட கற்றல்களை ஆராய்ந்த சிவில் சமூக பிரதிநிதிகளுடன் ஒரு குழுநிலை விவாதம் மற்றும் முழு இலங்கையிலிருந்தும் திரட்டப்பட்ட தனிப்பட்ட கதைகள் மற்றும் சமூக அனுபவங்களைப் பதிவு செய்யும் புகைப்படக்கதைகளின் புத்தக வெளியீடு ஆகியவை இடம்பெற்றன.
இந்நிகழ்வானது படைப்புகள் வாயிலாக ஒற்றுமையைக் கொண்டாடியதுடன் அதைத் தொடர்ந்து SCOPE இன் பங்காளர்கள் மற்றும் ஒத்துழைப்பாளர்களுக்கான பாராட்டு விழாவும் இடம்பெற்று Temple of Fine Arts இன் கலை நிகழ்ச்சியுடன் இனிதே நிறைவெய்தியது. மேலும் இங்கு மாற்றுக் கொள்கைகளுக்கான மையம், நினைவகக் காப்பகம் மற்றும் இலங்கை பரோமீட்டர் ஆகியவற்றின் SCOPE ஆல் ஆதரிக்கப்பட்ட கண்காட்சிகளும் இடம்பெற்றன.
SCOPE இன் வெற்றியை வடிவமைத்த கூட்டுமுயற்சிகளையும், இலங்கை முழுவதும் உரையாடல், உள்ளடக்கம் மற்றும் ஒற்றுமையை தொடர்ந்தும் ஊக்குவிக்கும், அர்ப்பணிப்புள்ள தனிநபர்கள் மற்றும் அமைப்புகளையும் கௌரவித்து, இந்நிகழ்ச்சி ஒரு வெற்றிக்கொண்டாட்டமாகவும் பிரதிபலிப்புத் தருணமாகவும் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.












