எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

1 week ago

அதானி நிறுவனத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் எல்.ஐ.சி. மூலம் அதிகளவு நிதியை மத்திய அரசு முதலீடு செய்ய வைத்தது என்ற குற்றச்சாட்டை நியூயார்க் போஸ்ட் நாளேடு வெளியிட்ட நிலையில், அது அடிப்படை ஆதாரமற்ற தகவல் என எல்.ஐ.சி. நிறுவனம் மறுத்துள்ளது. அதானி குழுமம் பற்றிப் பல்வேறு முறைகேடுகளை கூறி வந்த Hindenberg முழுமையாக மூடப்பட்ட நிலையில், பிகார் சட்டமன்ற தேர்தல் நேரத்தில் வாஷிங்டன் போஸ்ட் நாளேடு எல்.ஐ.சி மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களின் ஒருவரான கௌதம் அதானிக்கு சொந்தமான அதானி குழுமத்தின் கடன் சுமையைக் குறைக்கும் விதமாக, மத்திய அரசு அவருக்கு உதவி செய்தது என்றும், இதற்காக அரசு பொதுத்துறை நிறுவமனமான எல்.ஐ.சி மூலம் கடந்த மே மாதம், அதானி குழுமத்தின் பல நிறுவனங்களில், 507 மில்லியன் டாலர்களை அதாவது சுமார் 32,000 கோடியை முதலீடு செய்ததாகவும் வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மத்திய அரசு தந்த அழுத்தத்தின் கீழ், நிதி ஆயோக் மற்றும் எல்.ஐ.சி உடன் இணைந்து நிதித்துறை அதிகாரிகளால் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது என்று வாஷிங்டன் போஸ்ட் கட்டுரை கூறுகிறது. இதனை ஆதாரமாகக் கொண்டு எல்.ஐ.சி-யின் செயல்பாடுகளை விமர்சிக்கும் எதிர்க்கட்சியான காங்கிரஸ், கூட்டு நாடாளுமன்றக்குழு மற்றும் பொதுக் கணக்குக் குழுமூலம் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

மறுபுறம், வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட கட்டுரை தொடர்பாக விளக்கமளித்துள்ள எல்.ஐ.சி நிறுவனம், தங்களின் முதலீட்டு முடிவுகளில் எந்த ஒரு வெளிநபர் அல்லது அரசின் தலையீடும் கிடையாது என்று திட்டவட்டமாக மறுத்துள்ளது. அதானி குழுமத்தில் தொடர்புடைய நிறுவனங்களில் முதலீடு செய்ய எந்த ஒரு ஆவணத்தையோ அல்லது திட்டத்தையோ எல்.ஐ.சி தயாரிக்கவில்லை என்றும், விரிவான ஆய்வு மற்றும் கணக்கெடுப்புக்குப் பிறகு, எல்.ஐ.சி கொள்கை அடிப்படையில் சுயாதீனமாகவாக முதலீட்டு முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

எல்.ஐ.சி-யின் முதலீட்டு முடிவுகளில் நிதித்துறை அல்லது வேறு எந்தக் குழுவிற்கும் பங்கு இல்லை என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், எல்.ஐ.சி-யின் முதலீட்டு முறைகளை பாதிக்கவும், நாட்டு மக்கள் LIC மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் கெடுக்கும் நோக்கில் நியூயார்க் போஸ்ட் வெளியிடப்பட்ட கட்டுரை வெளியிட்டிருப்பது போல் தோன்றுகிறது என்றும் LIC அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது கடந்த காலங்களில் அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் என்ற நிறுவனம் பல்வேறு நிதி முறைகேடு புகார்களை முன்வைத்தது.

இதன் காரணமாக அதானி குழுமப் பங்குகளின் விலை இந்திய பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. எனினும், SEBI முன்னெடுத்த அடுத்தடுத்த கட்ட விசாரணைகளின் முடிவில், அதானி நிறுவனம் மீது ஹிண்டன்பர்க் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என விளக்கமளித்தது. கடந்த ஜனவரி மாதம் ஹிண்டன்பர்க் நிறுவனத்தை மூடுவதாக அதன் நிறுவனர் ஆண்டர்சன் அறிவித்தார்.

இதனிடையே, அதானி குழும விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, ஹிண்டன்பர்க் மூலம் தவறான குற்றச்சாட்டுகளை அதானி நிறுவனம் மீது சுமத்தி இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க முயற்சித்த Deep state என்ற ரகசிய அதிகார அமைப்பு, அதில் வெற்றி பெறாத காரணத்தால், தற்போது இந்தியாவின் முன்னணி நிறுவனமான LIC-ஐ குறிவைத்துள்ளதாக விமர்சித்துள்ளார்.

வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சி, நிதி நேர்மை குறித்து பேசுவது பிக்பாக்கெட் திருடன் பணப்பையை பாதுகாப்பதை குறித்து கற்பிப்பதை போன்று இருக்கிறது எனவும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இதுஒருபுறம் என்றால், எல்.ஐ.சி. நிறுவனம் அதானி குழுமத்தில் முதலீடு செய்ததை விட, அமெரிக்காவை சேர்ந்த காப்பீட்டு நிறுவனமான Athene Insurance, சுமார் 6,650 கோடி ரூபாயை, அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ளது. இதுதொடர்பாக Athene Insurance நிறுவனத்தின் தாய் நிறுவனமான Apollo Global Management விரிவான அறிக்கையையும் கடந்த ஜூன் மாதம் வெளியிட்டிருந்தது.

Athene Insurance நிறுவனத்தைப் போலவே, DBS பேங்க், DZ பேங்க், ரபோ (Rabo)பேங்க் மற்றும் Sino-Pac நிறுவனம் ஆகியவையும் அதானியின் கிரீன் எனர்ஜி குழுபத்தில் பல ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு முதலீட்டு நிறுவனங்கள் அதானி குழுமத்தின் வளர்ச்சி மீது நம்பிக்கை வைத்து முதலீடு செய்ததைப் போன்று தான் எல்.ஐ.சி. நிறுவனமும் முதலீடு செய்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு பொதுத்துறை நிறுவனமான LIC, இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் 2014 முதல் ஒரு லட்சத்து 56 ஆயிரம் கோடியை முதலீடு செய்துள்ளது. இதன் தற்போதைய மதிப்பு 15 லட்சத்து 60 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.

அதாவது எல்.ஐ.சி நிறுவனம் முதலீடு செய்த ஒவ்வொரு ரூபாய்க்கும், சுமார் 10 ரூபாய் வரை லாபம் கிடைத்துள்ளது. அதானி குழுமத்தில் சுமார் 32 ஆயிரம் கோடியை மத்திய அரசின் அழுத்தத்தால் எல்.ஐ.சி. முதலீடு செய்ததாக வாஷிங்டன் போஸ்ட் நாளேடு கூறியிருக்கும் நிலையில், சுமார் ஒரு லட்சத்து 33 ஆயிரம் கோடியை ரிலையன்ஸ் நிறுவனத்திலும், 82 ஆயிரத்து 800 கோடியை ஐடிசி நிறுவனத்திலும், சுமார் 65 ஆயிரம் கோடி ரூபாயை HDFC வங்கியிலும், சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாயை SBI வங்கி பங்குகளிலும், சுமார் 6 லட்சம் கோடியை TCS நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளது LIC.

அதானி குழுமத்தை குறிவைத்து ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட நிதி முறைகேடு புகார்கள் மூலம் பங்குச்சந்தையில் அதன் விலை குறைந்த போது, அதிகளவில் அதன் பங்குகளை வாங்கி சிலர் கொள்ளை லாபம் சம்பாதித்தனர்.

அதன் பின்னர் SEBI நடத்திய விசாரணைகளில், அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஹிண்டன்பர்க் முன்வைத்தது அம்பலமானது. தற்போது பீகார் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில், மத்திய அரசின் நற்பெயரை குலைக்கும் வகையில் வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டிருக்கும் செய்தியும், ஹிண்டன்பர்க் ரகமாகவே பார்க்கப்படுகிறது.