பறக்கும் கார் உற்பத்தியை தொடங்கிய சீன நிறுவனம்!

3 hours ago

டெஸ்லா நிறுவனத்திற்கு முன்பே பறக்கும் கார்களை உற்பத்தி செய்யும் பணியை சீன நிறுவனம் தொடங்கியுள்ளது.

மக்கள் தொகை பெருக்கத்தை விட அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலே மக்களைத் திக்குமுக்காட செய்கிறது. இதனைச் சரிசெய்ய பல தொழில் நிறுவனங்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

போக்குவரத்து நெரிசலால் சலிப்படையும் பயணத்தை எளிமையாக்க பறக்கும் காரை வடிவமைக்க உலகின் பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டு வருகின்றன.

அந்த வகையில் இந்தாண்டு இறுதிக்குள் பறக்கும் காரை அறிமுகம் செய்து டெமோ காட்ட உள்ளதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.

தொழில்நுட்பத்தில் அதிவேகத்தில் இயங்கும் டெஸ்லா நிறுவனத்திற்கு முன்பே பறக்கும் கார்களை உற்பத்தி செய்யும் பணியைச் சீன நிறுவனம் தொடங்கியுள்ளது.

சீன மின்சார வாகன தயாரிப்பாளரான Xpeng Aeroht நிறுவனமே அதன் மாடுலர் பறக்கும் காரான Land Aircraft Carrier இன் சோதனை உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.

ஒரு லட்சத்து 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட தொழிற்சாலையில் முதற்கட்டமாக 5 ஆயிரம் கார்கள் தயாரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.