அபிவிருத்தியை இலக்காகக் கொண்டே 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும். முழு நாட்டையும் உள்ளடக்கிய மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கூடிய வரவு – செலவு திட்டமாகவே அது காணப்படும். இம்முறை வரவு – செலவு திட்டத்தில் வரி அதிகரிக்கப்பட மாட்டாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (04) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

7ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் 2026ஆம் ஆண்டுக்கான பட்ஜட் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இம்முறை பட்ஜட்டில் வரி அதிகரிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஏற்கனவே தெரிவித்திருக்கின்றார்.

இயன்றளவு சகல துறைகளுக்கும் நிவாரணம் வழங்க எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறு நிவாரணத்தை வழங்குவது, அபிவிருத்தி திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு அவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது பட்ஜட் உரையின் போது தெளிவுபடுத்துவார். முழு நாடு தொடர்பிலும், உற்பத்தி தொடர்பிலும் இதன் போது அவதானம் செலுத்தப்படும்.

நாட்டின் பொருளாதாரம் தற்போது ஸ்திரமடைந்துள்ளது. அனைத்து துறைகளும் வளர்ச்சிப் போக்கைக் காண்பிக்கின்றன. அவற்றை மேலும் ஊக்குவிக்க வேண்டும். உற்பத்தி, ஏற்றுமதி பொருளாதாரத்தின் மூலம் திறைசேரிக்கும் கிடைக்கும் வருமானம் முறையாக மக்களை சென்றடைவதற்கான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படும் என்றார்.