30 இந்திய கடற்றொழிலாளர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!

9 hours ago

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 30 இந்திய கடற்றொழிலாளர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் குறித்த கடற்றொழிலாளர்கள் 30 பேரும் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் குறித்த கடற்றொழிலாளர்கள் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

நீதிமன்றில் முன்னிலை 

குறித்த மீனவர்களின் வழக்கு விசாரணை நேற்றைய தினம் (06.11.2025) மன்னார் நீதிமன்றத்தில் இடம்பெற்ற நிலையில் அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

30 இந்திய கடற்றொழிலாளர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை! | Prison For 30 Indian Fishermen Postponed

இதன்போது முதலாம் மற்றும் இரண்டாம் குற்றச்சாட்டுக்களுக்கு பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட தலா 12 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மூன்றாவது குற்றச்சாட்டுக்கு 26 கடற்றொழிலாளர்களுக்கு தலா 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்ட 4 இந்திய கடற்றொழிலாளர்களுக்கு மூன்றாவது குற்றச்சாட்டிற்காக தலா 2 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

பின்னர் அனைவருக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் குறித்த கடற்றொழிலாளர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நான்கு படகுகளின் உரிமையாளர்களையும் எதிர்வரும் மார்ச் மாதம் 19 ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

படகு தவிர்ந்த ஏனைய சான்றுப் பொருட்களை அரச உடமையாக்க நீதவான் உத்தரவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.