உலகின் புதிய அரசியல் ஒழுங்குமுறை வானத்தைக் கட்டுப்படுத்தல் கடலை ஆட்சிப்படுத்தல் மண்ணின் அருமூலகங்களை தமதாக்கல் போன்ற நோக்கங்களை அடைவதற்கான வல்லாண்மைகளின் பிராந்திய மேலாண்மைகளின் அனைத்து நாடுகளுடனுமான கூட்டாண்மை பங்காண்மை வழியாக வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த மாற்றத்தின் விளைவாக எந்த நாடாக இருந்தாலும் அந்த நாட்டுக்குள் இந்த இலக்குகளை நிறைவேற்ற அனைத்துலக சட்டங்களை மீறி நேரடியாகவோ மறைமுகமாகவோ தமது “வலு” வினை பயன்படுத்தல் வல்லாண்மைகள் பிராந்திய மேலாண்மைகளின் அரசியல் முறைமையாக மாறியுள்ளது.
இந்நிலையில் ஈழத்தமிழர்கள் போன்ற இன்றைய உலகில் காலனித்துவத்தால் தீர்க்கப் படாத பிரச்சினையாகத் தங்களின் தன்னாட்சி உரிமையைக் கொண்டு தங்களின் அரசியல் எதிர்காலத்தைத் தாங்கள் அமைத்துத் தங்களுக்கான பாதுகாப்பான அமைதியான வாழ்வையும் வளர்ச்சிகளையும் பெற இயலாமல் உள்ள உலகின் தேச இனங்கள், காலனித்துவ அரசாங்கங்கள் உருவாக்கிய நவகாலனித்துவ ஆட்சியாளர்களாகத் தங்கள் வரலாற்றுத் தாயகத்தை ஆட்சிப் படுத்தும் சிறிலங்கா போன்ற ஆட்சியாளர்களால் இனஅழிப்புக்கு இனத்துடைப்புக்கு பண்பாட்டு இனஅழிப்புக்குத் தொடர்ச்சியாக உள்ளாகி வருவதை தற்போது வளர்ந்து வரும் உலகின் புதிய அரசியல் முறைமை பாதுகாக்கின்றது. இதனையே ஈழத்தமிழர்கள் முதல் பலஸ்தீனியர்கள் வரை உலகு சமகால வரலாறாகக் காண்கிறது.
இந்நிலையில் அனைத்துலக நாடுகளோ அனைத்துலக அமைப்புக்களோ ஐக்கிய நாடுகள் சபையோ அனைத்துலக நீதிமன்றங்களோ பாதிக்கப்படும் தேசஇனங்களுக்கு எந்தவித பாதுகாப்பையும் வழங்க இயலாத நிலை தொடர்கிறது.
இந்தச் சிக்கலான காலத்தில் ஈழத்தமிழர்கள் போன்ற தேசஇனங்கள் தாங்கள் தங்களுடைய தாயக இறைமையை மீளுறுதிப்படுத்தித் தங்கள் மக்களின் நாளாந்த பாதுகாப்பை அமைதியை வளர்ச்சிகளை உறுதிப்படுத்தத் தாங்களே தங்களின் உயிரைக்கூடப் பொருட்படுத்தாது ஒருமைப்பாட்டுடன் சனநாயக வழிகளில் உழைக்க வேண்டிய தேவை காலத்தின் கட்டாயமாகிறது. இதற்கான உள்ள உறுதியையும் நம்பிக்கையையும் தருகின்றவர்கள்தான் ஈழத்தமிழர்களின் மாவீர்கள் எனப்படும் தமக்காக வாழாது தங்கள் மண்ணினது பாதுகாப்புக்காகவும் தங்கள் மக்களின் ஒருமைப்பாட்டுக்காகவும் தங்கள் இன்னுயிர்களையே அர்ப்பணித்த மரணமற்ற மனிதர்களின் வரலாற்றை ஈழத்தமிழர்கள் மீள்வாசிப்புச் செய்வதற்கான மாதமாக ஈழத்தமிழர் தாயகத்தின் தேசிய நாளான மாவீரர் நாள் நவம்பர் 27 இல் இடம்பெறும் நவம்பர் மாதம் ஒவ்வொரு ஆண்டும் அமைகிறது.
அந்த வகையில் ஈழத்தமிழர்கள் இந்த நவம்பர் மாதத்தில் கார்த்திகை 27 அமையும் வாரத்தை மாவீரர் வாரமாகவும் கட்டமைத்து வாழ்ந்து வருகின்றனர். இந்தக் கார்த்திகை மாவீரர் வாரத்துக்கான சிந்தனைகளை செயல்திட்டங்களை நவம்பர் மாதத்தின் முதல் மூன்று வாரங்களிலும் தம்மால் இயன்றளவு தங்கள் சக்திக்கு ஏற்ற வகையில் 1989 முதல் 36 ஆண்டுகளாக பலத்த சவால்களுக்கு மத்தியில் ஈழத்தமிழர்கள் முன்னெடுத்து வருவதே ஈழத்தமிழர்களின் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளை எவராலும் எதனாலும் இன்று வரை அழிக்க இயலாது விழவிழ எழுவோம் என ஈழத்தமிழர்கள் உலகின் உலக இனமாக இன்று பரிணாமம் அடைந்துள்ளதன் காரணியாக உள்ளது.
இதனால் ஈழத்தமிழரின் மாவீரர்நாளை தேசியநாளை தேசத்தின் நாளை இறந்தவர்களை நினைவு கூரும் இறப்பு நினைவேந்தல் எனச் சிறிலங்கா மடைமாற்றம் செய்து அதற்குத் தாங்கள் அனுமதிப்பதாகவும் ஆனால் மாவீர்களின் சீருடை தரித்த திருவுருவங்கள் தாயகத்தின் அடையாளங்கள் எதுவும் வைக்காது அதனைச் செய்ய வேண்டுமென்று படைபலத்துணையுடன் கட்டளையிட்டு மாவீரர் நினைவை மங்கிப்போக வைக்க பெருமுயற்சி செய்து வருவதை வழமையாகக் கொண்டு திகழ்வதும், ஈழத்தமிழ் மக்கள் இந்தத் தடையை மீறித் தங்களின் மாவீரர்களை தமிழரின் நடுகல் வைத்து வீரவணக்கம் செய்யும் பழம்பெரும்பண்பாட்டின் வழி மாவீரர் வித்துடல்கள் சுமந்து நிற்கும் மாவீரர் துயிலகங்கள் எங்கும் தேசமாகவே திரண்டெழுவதும் உலகின் சமகால வரலாறாக உள்ளது. இவ்வாண்டும் ஈழத்தமிழர்கள் மாவீரர் நாளான கார்த்திகை 27 இல் தாயகத்திலும் உலகெங்கும் தேசமாக எழுவது சமகாலத்தின் மிகமுக்கிய தேவையாக உள்ளது. இன்றைய தேசிய மக்கள் சக்தி ஈழத்தமிழர்களை வடக்குவாழ் சமுகத்தினர் கிழக்கு வாழ் சமுகத்தினர் என அவர்களின் தேசஇனத்தன்மையை வெறுமனே சமுகம் என மாற்றி அதனை புதிய அரசியலமைப்பாக ஏக்கிய இராஜ்ஜியமாக-இலங்கைத் தீவில் ஒற்றையாட்சி என்ற பிரித்தானிய காலனித்துவம் ஈழத்தமிழர்கள் மேல் திணித்த சிங்களப்பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற உரிமையையும் கடந்து-ஒரே நாடு சிங்கள நாடு என இலங்கைத் தீவின் முழுநிலப்பரப்பையுமே சிங்களவர்களுக்குரியதாக பௌத்த சட்டங்களுக்கு உரியதாக மாற்றும்-முழுஅளவிலான சிங்கள ஆக்கிரமிப்பை வாழைப்பழத்தில் ஊசி ஏத்துவது போல் தந்திரமாக முன்னெடுக்கும் ராஜதந்திரத்துக்கு எதிராக நாம் தனித்துவமான தாயக தேசிய தன்னாட்சி உரிமையுள்ளவர்கள் என உலகுக்கு நிரூபிக்க வேண்டிய வரலாற்றுக்கடமையினை நிறைவேற்ற வேண்டியவர்களாக உள்ளனர்.
மேலும் ஈழத்தமிழர் இந்த நவம்பர் மாதத்தில் தங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டை உரையாடல்கள் உறவாடல்கள் மூலம் உறுதிப்படுத்த வேண்டும். சனநாயக வழிகளில் தேசிய விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்படுகையில் வேறுபாடுகள் உடன்பாடின்மைகள் இயல்பாகும். இவற்றறை பிரவினையாக மாற்றாது, பொறுமையுடன் தாயக தேசிய தன்னாட்சியை உறுதிப்படுத்துவதற்கான பலமாக மாற்று வதற்கான உரையாடல்களை உருவாக்கி ஒருமைப்பாட்டைப் பலப்படுத்த வேண்டும். இதற்கு ஈழத்தமிழர் சிவில் சமூகம் தாயகத்திலும் அனைத்து உலகிலும் மக்களின் தேவைகளை வெளிப்படுத்தும் குரல்களாகி அவற்றுக்கான செயற்திட்டங்களையும் ஆளணிகளையும் உருவாக்கி உழைத்திட வேண்டிய பொறுப்புள்ள காலமாக 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்தை ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்பதே இலக்கின் இவ்வார எண்ணம். இந்த எண்ணத்தின் பின்னணியில் இன்றைய உலகம் பொருளாதாரத்தை மையப்படுத்தியதாக தனது அரசியலைக் கட்டமைக்கும் நேரத்தில் தாயகத்தின் இயற்கை வலு மக்களின் மனித வலு சமுக மூலதன வலு என்பவற்றை தெளிவாக உலகம் கண்டுகொள்ளக் கூடிய வகையில் தொகுத்து வகுக்கும் பணியையும் ஈழத்தமிழர்கள் ஒருங்கிணைந்து செய்து மண்விடுதலைக்கு உழைக்க வேண்டுமென்பது இலக்கின் எண்ணமாகவுள்ளது.












