மாவீரர்கள் நினைவு கூரப்படுவது தொடர்பாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒரு நல்ல தீர்மானம் எடுத்திருப்பதால் மக்கள் அச்சமின்றி நினைவு கூருவார்கள் என தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி அமைப்பாளரான சாம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கில் நீண்ட நாட்களாக இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் சட்டவிரோத கடற்றொழில்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்தும் இவற்றைக் கட்டுப்படுத்த முடியாததற்குக் காரணம், அரச இயந்திரத்தின் கீழ் இயங்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறுவதுதான் என்று சுட்டிக்காட்டினார்.
அத்துடன், நடவடிக்கை எடுக்க வேண்டிய பல அதிகாரிகள் இவற்றை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும், அவர்கள் மிக விரைவில் அகற்றப்பட்டதும் சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுவோர் விரைவில் அகற்றப்படுவார்கள் எனவும் உறுதியளித்தார்.
மாவீரர்கள் தொடர்பில் தமது அரசாங்கம் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் நல்ல தீர்மானம் எடுத்திருப்பதால், மக்கள் அச்சமின்றி இறந்தவர்களை நினைவு கூருவார்கள் என்றும் சாம் நம்பிக்கை தெரிவித்தார்.











