மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிஓடை மற்றும் பாலாமடு பகுதிகளில் காட்டு யானைகள் நேற்று ஒரே
இரவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
மாவடிஓடைப் பகுதியில் 5 வீடுகளையும் ஒரு கடையையும் உடைத்து நாசம் செய்ததுடன், பாலாமடு பகுதியில் விவசாயிகளின் தங்குமிடமாக இருந்த 3 கொட்டகைகளையும் யானைகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளன. மேலும், பல பயன்தரும் மரங்களும் அழிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தொடர்ச்சியான காட்டு யானை தாக்குதலால் உயிர் அச்சத்தில் வாழும் மாவடிஓடை மக்கள், தமது பகுதியில் யானைகளின் பிரச்சினையை கட்டுப்படுத்த நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டு யானை பிரச்சினை குறித்து மட்டக்களப்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். யானைகளை துரத்துவதற்கான முயற்சிகளில் கூட அதிகாரிகள் பின்வாங்குவதாகவும், மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் யானையின் தாக்குதல் தொடர்பில் குறித்த பிரதேசத்தின் கிராமசேவையாளருக்கு அறிவித்தபோதிலும் தாக்குதல் நடந்து இருதினங்களின் பின்னரே குறித்த பகுதிக்கு அவர் வருகைதருவதாகவும் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கிராமங்களில் நடைபெறும் இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் நடவடிக்கையெடுக்கவேண்டிய கிராம சேவையாளரே இவ்வாறான நிலையிலேயே இருந்துவருவதாகவும் கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மாவடிஓடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் உயிர் மற்றும் சொத்து பாதுகாப்புக்காக உடனடி தீர்வை கோருகின்றனர்.













