இலங்கையின் காலனித்துவ கட்டமைப்பிற்குள் தமிழர்களை சிக்க வைக்கும் 13ஆவது திருத்தம், கூட்டாட்சி அல்லது நிர்வாக சபைகள் பற்றி விவாதிப்பதை நிறுத்துமாறு, சர்வதேச தமிழர் அமைப்பு ஒன்று கோரியுள்ளது.
ஈழத்திலும் உலகப் புலம்பெயர்ந்தோரிலும் உள்ள அனைத்து தமிழர்களிடமும், இந்த கோரிக்கையை முன்வைப்பதாக, அமெரிக்கத் தமிழ் புலம்பெயர்ந்தோர் வலியுறுத்தியுள்ளனர்.

அதற்குப் பதிலாக, சுயநிர்ணய உரிமை மற்றும் இறையாண்மைக்கான பிரிக்க முடியாத உரிமை உள்ளது என்பதை அங்கீகரிக்கும், ஐக்கிய நாடுகளின் 1960 காலனித்துவ நீக்கப் பிரகடனத்தின் 1514ஆவது தீர்மானத்தின் கீழ் தமிழர்கள் ஒன்றுபட வேண்டும் என்று அமெரிக்க தமிழ் புலம் பெயர்ந்தோர் வலியுறுத்தியுள்ளனர்.

காலனித்துவத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், தீவில் மூன்று தனித்துவமான இறையாண்மை கொண்ட இராச்சியங்கள் இருந்தன.  வடக்கில் யாழ்ப்பாணத் தமிழ் இராச்சியம், மத்திய மலைகளில் கண்டி இராச்சியம், மற்றும் தெற்கில் கோட்டே இராச்சியம் என்பனவே அவையாகும்.  எனினும், தமிழர்களின் ஒப்புதல் இல்லாமல், 1833ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் இந்த நாடுகளை வலுக்கட்டாயமாக ஒரே நிர்வாகத்தில் இணைத்தனர்.

இந்த நிலையில், தமிழ் மக்கள் தங்கள் இறையாண்மையை விட்டுக்கொடுக்க ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என அமெரிக்கத் தமிழ் புலம்பெயர்ந்தோர் கூறியுள்ளனர். அத்துடன், கொழும்பின் அரசியல் அமைப்பிற்குள் தவறான சமரசங்களை ஏற்றுக்கொண்ட தலைவர்களின் வரலாற்றுத் தவறுகளை மீண்டும் செய்ய வேண்டாம் என்று அமெரிக்க புலம்பெயர்ந்தோர், ஈழத்தமிழர்களை கூறியுள்ளனர்.