‘தமிழகத்தின் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த கைதி ஒருவரை, அவரது குடும்பத்தினர் சிறையில் சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த 44 வயதான புஷ்பராஜ் என்ற குறித்த கைதி, கடந்த 2022ஆம் ஆண்டில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்திய தேசிய புலனாய்வு முகவரகத்தினால் கைது செய்யப்பட்டார்.
போதைப் பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டும் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தின் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள புஷ்பராஜ், சிறையில் தனது குடும்ப உறுப்பினரைச் சந்திக்க அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, ‘தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பின்படி, மனுதாரரைச் சந்திக்க அவரது குடும்பத்தினருக்கு அனுமதி அளிக்க வேண்டும்’ எனப் புழல் சிறைச்சாலை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்துள்ளது.