நாளை முதல் 27ஆம் திகதி வரையில் வடக்கில் மழை பெய்யும் ?

3 hours ago

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் நாளைய தினம் திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 25 - 27ஆம் திகதி வரையில் கனமழை பெய்யும் என யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்

மேலும் தெரிவிக்கையில், 

புதிய காற்றுச் சுழற்சி எதிர்வரும் 18ஆம் திகதி வரை வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு கிழக்காக, தென்கிழக்காக என அங்குமிங்கும் அலைந்து இலங்கைக்கு கீழாக குமரிக்கடலை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மீண்டும் எதிர்வரும் 19ம் திகதி இந்தோனேசியாவின் பண்டா ஆச்சே மாநிலத்திற்கருகே வங்காள விரிகுடாவில் ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளது. 

தற்போதைய நிலையில் இது புயலாக மாறி தமிழ்நாட்டில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இத்  தாழமுக்கத்தின் விருத்தி, கரையைக் கடக்கும் இடம் என்பனவற்றை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பின்னரே உறுதிப்படுத்த முடியும். 

ஆனாலும் நாளைய தினம் திங்கட்கிழமை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 

இவ்வாண்டுக்கான வடகீழ்ப் பருவமழை எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் அதிகரிப்பதோடு தொடர்ச்சியாக கிடைக்கும் வாய்ப்புள்ளது. எதிர்வரும் 27 ஆம் வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை தொடரும். 

கடந்த பல வருடங்களாக நவம்பர் 25,26,27ஆம் திகதிகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் கன மழையைப் பெறுவதுண்டு. இவ்வருடமும் அது தொடரும். 

இவ்வாறான காலநிலை மாற்றம், எதிர்காலத்தில் பல வியக்கத்தக்க ஆச்சரியங்களையும், விரும்பத்தகாத மாற்றங்களையும் எங்கள் பிரதேசங்களின் வானிலைக் கோலங்களில் ஏற்படுத்தும் என மேலும் தெரிவித்தார்