தென்னாபிரிக்காவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை: ஜி – 20 மாநாடும் புறக்கணிப்பு…

3 hours ago

தென்னாபிரிக்காவில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள ஜி – 20 உச்சி மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அத்துடன், ஜி -20 நாடுகளில் தென்னாபிரிக்கா அங்கத்துவம் வகிக்கக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜி – 20 மாநாட்டை நடத்தும் வாய்ப்பு கடந்த வருட மாநாட்டின்போது தென்னாபிரிக்காவுக்கு வழங்கப்பட்டது. இதற்கமைய எதிர்வரும் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் குறித்த மாநாட்டை நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை தென்னாபிரிக்கா செய்துள்ளது.

மாநாட்டுக்கு தென்னாபிரிக்கா ஜனாதிபதியே தலைமை தாங்குவார். ஆபிரிக்க மண்ணில் இம்முறையே முதன்முறையாக ஜி – 20 மாநாடு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. தென்னாரிக்காவில் வெள்ளையர்கள் மோசமாக நடத்தப்படுவதாகவும், இனப்படுகொலை நடத்தப்படுவதாகவும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவூதி அரேபியா, தென்கொரியா, அமெரிக்கா, தென்னாபிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், ஆபிரிக்க ஒன்றியம் என்பன ஜி – 20 கட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.