இந்தியாவிற்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்திற்கு மத்தியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை புது டில்லியில் சந்தித்து அவருடன் பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது சமூக, பொருளாதார மற்றும் அரசியல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
இந்திய-இலங்கை கூட்டாண்மை, பிராந்திய ஸ்திரத்தன்மை, தொடர்புகள் மற்றும் பரஸ்பர முன்னேற்றம் தொடர்பில் இரு தரப்பினரின் அர்ப்பணிப்புகள் குறித்து பல கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இதேவேளை, இந்தியாவின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவராக, அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் அவர்கள், இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டுமொரு முறை, மீண்டெழுந்து நிற்பதற்குத் தேவையான பயன்பெறும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை இந்தியா பெற்றுத் தந்தமைக்கு தலையீடு செய்தமைக்காக எதிர்க்கட்சித் தலைவர் நன்றி தெரிவித்தார்.
இலங்கையின் நீண்டகால பொருளாதார மறுமலர்ச்சியைத் திட்டமிடுவதற்காக இன்றைய காலத்தைப் பயன்படுத்துவது குறித்து பல கருத்துக்களை கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இங்கு முன்வைத்தார்.
இலங்கைப் பொருளாதாரத்தில் கண்டு வரும் முன்னேற்றங்கள், தொடர்ச்சியாக நடந்து வரும் சீர்திருத்தங்கள் மற்றும் கடன் நிலைத்தன்மையைப் பேணுவதற்கான திட்ட வரைபடம் குறித்து அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விளக்கமளித்தார்.
இதன்பிரகாரம், எதிர்வரும் 2028 முதல் கடன் திருப்பிச் செலுத்த ஆரம்பிக்கும் போது, IMF வேலைத்திட்டத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் எதிர்பார்க்கப்படும் சவால்களையும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது கோடிட்டுக் காட்டினார்.
இதன் பொருட்டான பிராந்திய முதலீடு மற்றும் ஒத்துழைப்பால் ஆதரிக்கப்படும் ஒரு நிலைபேறான அபிவிருத்தி மூலோபாயத்தின் அவசியப்பாடு தொடர்பிலும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
வர்த்தகம், எரிசக்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் இங்கு பல யோசனைகளை இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டன.










