கணேமுல்ல சஞ்ஜீவ கொலைசம்பவத்தின் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை போன்று மாறுவேடமணிந்து மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் ஆண் சட்டத்தரணிகள் அணியும் ஆடையை அணிந்து ஏமாற்றி நுழைந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளதுடன் தடுப்பு காவலில் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெறுவதாக மேலும் தெரிவித்துள்ளனர்.
போலியான சட்டத்தரணியான குறித்த நபர் சட்ட ரீதியான உதவிகளை பெற்று தருவதாக கோரி பலபேரிடம் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபர் கடந்த 08ஆம் திகதி ஒந்தாச்சி மடத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்ததுடன் இந்த சம்பவம் சட்டத்தரணிகள், மற்றும் பொதுமக்கள் மத்தியில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பில் பெண் ஒருவர் வீட்டில் தங்க ஆபரணங்கள் திருட்டு போன சம்பவம் தொடர்பாக மீட்கப்பட்ட ஆபரணங்களை நீதிமன்றில் இருந்து மீளப் பெறுவது தொடர்பாக, மட்டக்களப்பு நீதிமன்றில் இடம்பெற்றுவரும் வழக்கு விசாரணைக்கு வாதாடுவதற்காக சட்டத்தரணி ஒருவரை தேடிய நிலையில் அவருக்கு அறிமுகமான ஒருவர், இந்த போலியான சட்டதரணியின் தொலைபேசி இலக்கத்தை பெண்ணிற்கு வழங்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து போலியான சட்டத்தரணி இந்த வழக்கிற்காக 2 இலட்சம் ரூபாவினை பெண்ணிடம் கோரியுள்ளார்.
குறித்த பெண் சம்மதித்து அவருக்கு முற்பணமாக ஒரு இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 06ஆம் திகதி வழக்கு விசாரணைக்காக குறித்த பெண் மற்றும் போலி சட்டத்தரணி ஆகியோர், நீதிமன்றத்திற்கு சென்றுள்ள நிலையில் ஏற்கனவே வழக்கிற்கு ஆஜராகிய சட்டத்தரணி இந்த போலி சட்டத்தரணி தொடர்பாக சந்தேகம் எழுந்ததையடுத்து அவரை அங்கிருந்து பதிவாளர் காரியாலயத்துக்கு அழைத்துச் சென்று இவர் சட்டத்தரணியா? என உறுதிப்படுத்துமாறு கோரியுள்ளார்.
அதனையடுத்து நீதிமன்ற பதிவாளர் போலி சட்டத்தரணியிடம் அடையாள அட்டையை கோரியபோது அவர் தனது வாகனத்தில் இருப்பதாக முதலில் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் அங்கிருந்து சட்டத்தரணிகள் வாகனம் நிறுத்தும் பகுதிக்கு சென்று தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து இந்த போலி சட்டத்தரணி தொடர்பாக நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக சட்டத்தரணி போல நீதிமன்றத்திற்குள் தனது வாகனத்துடன் உள்நுழைந்து சட்டத்தரணிகள் வாகனம் நிறுத்தும் பகுதியில் தனது வாகனத்தை நிறுத்தி நீதிமன்ற வளாகத்திற்குள் நடமாடி வந்துள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து சட்டத்தரணி என அடையாளப்படுத்தும் போலி வருகை அட்டை மற்றும் இறப்பர் முத்திரை, சட்டத்தரணி என வாகனத்துக்கு அடையாளப்படுத்தி ஒட்டப்படும் ஸ்டிக்கர், கறுப்பு கழுத்துப்பட்டி, கோட் சூட், மற்றம் வழக்குகளுக்கு தேவையான 16 ஆவணங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கைது செய்துள்ள சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.







.jpeg)



