2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகியுள்ளது
இந்த பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள 2,362 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.
இம்முறை பரீட்சைக்கு 3,40,525 பரீட்சார்த்திகள் தகுதி பெற்றுள்ளதுடன் இவர்களில் 2,46,521 பாடசாலை பரீட்சார்த்திகளும், 94,004 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குகின்றனர்
பரீட்சை ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சை நிலையங்களுக்கு வர வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக விசேட பேருந்து சேவை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபால தெரிவித்துள்ளார்.
அத்துடன், பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் அனர்த்தங்கள் காரணமாக ஏற்படக்கூடிய தடைகளைத் தவிர்ப்பதற்காக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விசேட வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்தியுள்ளதாக அந்த நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட குறிப்பிட்டுள்ளார்.











